நீலகிரி: தென்னிந்தியாவின் உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா என்றால் பெரிய மலை என்று பொருள். தொட்டபெட்டா மலை சிகரத்திலிருந்து பார்த்தால் உதகை நகரம், குன்னூர், மைசூர் மற்றும் முதுமலை வனப்பகுதி உட்பட பல்வேறு இடங்களைக் காணலாம்.
நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி உதகைக்கு புறப்பட்டு விடுவார்கள்.
சரி..! அப்படி, உதகைக்கு செல்பவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லலாம். அந்தப் பகுதியின் சிறப்புகள் என்ன..? என்பதை நமது வாராந்திரக் கட்டுரையின் மூலம் விளக்கி வருகிறோம். அந்த வகையில், இந்த வாரம் நாம் காணும் சுற்றுலாப் பகுதி தொட்டபெட்டா....

தென்னிந்தியாவின் உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா என்றால் பெரிய மலை என்று பொருள். தொட்டபெட்டா மலை சிகரத்திலிருந்து பார்த்தால் உதகை நகரம், குன்னூர், மைசூர் மற்றும் முதுமலை வனப்பகுதி உட்பட பல்வேறு இடங்களைக் காணலாம். இவற்றை பார்ப்பதற்கு தொட்டபெட்டா மலை பகுதியில் தொலைநோக்கு கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உதகையின் இயற்கை அழகை பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

சிறப்பு பேருந்து
உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 5 கி.மீ. சென்றால் தொட்டபெட்டாவுக்கு செல்லும் சாலை பிரிகிறது. அந்தப் பகுதியிலிருந்து 3 கி.மீ. தூர சாலை குறுகியதாகும். இதில், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லலாம். பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பேருந்துகள் செல்லமுடியாது. இதனையறியாமல், பெரிய அளவிலான பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, சீசன் காலங்களில் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலாப் பேருந்து இயக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு காணப்படுவதால், வனத்துறையின் சார்பில் வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தில் பயணிப்பதற்கு ஒருவருக்கு ரூ. 30 வசூலிக்கப்படுகிறது.

பார்க்கிங் கட்டணம்
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரம், தற்போது சுற்றுலாத்துறை பராமரிப்பில் உள்ளது. நுழைவு கட்டணமாக 5 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் ரூ. 7 வசூலிக்கப்படுகிறது. கேமிராவுக்கு ரூ. 50-ம், வீடியோ கேமிராவிற்கு ரூ. 60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தொட்டபெட்டா பகுதியில் வாகனங்களை பார்கிங் செய்வதற்கு மினி வேனுக்கு வாகனத்திற்கு ரூ. 40-ம், கார் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு ரூ. 20-ம் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
