கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் மற்றம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பும், டவுன்ஹால், பீளமேடு, உள்ளிட்ட இடங்களிலும் தி.மு.க. தொண்டர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

இது குறித்து தி.மு.க.வின் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கூறுகையில், " நீதிமன்ற ஆணையை செயல்படுத்த கோரி தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசு தமிழர் விரோத போக்குடன் இருப்பது சரியானதல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் கோவையில் நடைபெறும்." என்றார்.