தி.மு.க. மகளிர் அணியினை சேர்ந்தவர்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வினர் அவதூறாக பேசுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாநகர காவல் ஆணையரிடத்தில் இன்று தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்
கோவை: தி.மு.க. மகளிர் அணியினை சேர்ந்தவர்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வினர் அவதூறாக பேசுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாநகர காவல் ஆணையரிடத்தில் இன்று தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

கடந்த 21-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழ்நாட்டிற்குள் ரத ஊர்வலம் வருவதை எதிர்த்து போராடிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் போராட்டத்தோடு, அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டனர். இதற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த ரமா, ஜெகதீசன் என்ற இருவரும் புகைப்படத்தில் இருந்த பெண்களை விமர்சித்துள்ளனர். இதையடுத்து பெண்களை அவதூறாக விமர்சணம் செய்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. மகளிர் அணியினர் இன்று கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தனர், முகநூலில் அவதூறாக பதிவிட்டிருக்கும் நகலையும் இணைத்து கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவிடம் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, அக்கட்சி மகளிர் அணியின் மாநில துணை செயலாளர் மீனா லோகநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஸ்டாலின் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து எங்களது மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். அந்த புகைப்படத்தை எனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். அதற்கு பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த ரமா என்ற பெயரில் உள்ள நபர் மிகவும் தரம் தாழ்த்தி விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். இது போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்களை இழிவுபடுத்தியுள்ளது. இதனால் ரமா மற்றும் ஜெகன் குமார் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.