சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி சிறுதுளி அமைப்பினர் சார்பில் 'நொய்யல் நதி' பற்றிய கருத்தரங்கம், நொய்யல் லைஃப் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.
கோவை: சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி சிறுதுளி அமைப்பினர் சார்பில் 'நொய்யல் நதி' பற்றிய கருத்தரங்கம், நொய்யல் லைஃப் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையைச் சேர்ந்த் சிறுதுளி அமைப்பின் சார்பிலும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, நொய்யல் லைஃப் சென்டர் வளாகத்தில் 'நொய்யல் நதி' பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறுதுளி அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மணியன் மற்றும் சுரேஷ் இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றினர்.
நொய்யல் நதியின் வரலாறு, முக்கியத்துவம், அதன் தற்போதைய நிலை போன்ற பல்வேறு கருத்துகளை மணியன் பகிர்ந்துகொண்டார். அவரைத்தொடர்ந்து, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை பற்றி சுரேஷ் விவரித்தார். இக்கருத்தரங்கில், RAF (Rapid Action Force) படையைச் சேர்ந்த 50 வீரர்களும், டெக்ஸ்சிட்டி கலை கல்லூரி மற்றும் காருண்யா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கின் நிறைவாக, நீர் சேமிப்பு குறித்த உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது. இதனையடுத்து, கோவையில் உள்ள முக்கியமான பேருந்து சந்திப்புகளில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, Environment Foundation of India (EFI) மற்றும் சிறுதுளி சார்பில் நொய்யல் நதி பிறக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சுத்தமான சுணை நீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கோவையில் உள்ள பிரதான குளங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட மாசடைந்த நீர் மாதிரிகளும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

மேலும், குப்பைகளை முறையாகப் பிரித்து கொட்டுவது குறித்தும், நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்தும் தன்னார்வலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.