திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில். இக்கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தும் உப்பு பொட்டிலங்களை விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 70 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கடையில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. முதலில், பயங்கர வெடி சத்தத்துடன் பற்றத் துவங்கிய தீ, பின்னர் கொளுந்துவிட்டு எரிந்து கடை முழுவதையும் தீக்கிறையாக்கியது. பின்னர், அருகிலிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைக்குள் பொட்டாசியம் நைட்ரைடு மற்றும் பெரியம் நைட்ரைடு ஆகியவை இருந்ததால் தீகொளுந்து விட்டு எரிந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தின் மூலம் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மாநகரின் மிக முக்கியப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.