வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சாய்பாபா காலனி பகுதியில் சாஜித்குமார் என்பவர் பி.எஸ்.என். மேன் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் சார்பில் வெளிநாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பி ஏராளமான இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். மேலும், பாதிப்பணம் செலுத்தியதும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டதாகவும், விசா கிடைத்தவுடன் மீதப்பணத்தை செலுத்த வேண்டுமெனவும் அந்நிறுவனத்தினர் விண்ணப்பித்தவர்களிடம் கூறியுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்கான இதுபோன்ற பல்வேறு நடைமுறைகள் முடிவடைந்து, பல மாதங்களாகியும் எந்த பதிலும் இல்லாததால், பணத்தைச் செலுத்தியவர்கள் அந்நிறுவனத்தை அணுகியுள்ளனர். ஆனால், முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று பி.எஸ்.என் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் செலுத்திய பணத்தை உடனடியாக தர வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய அந்நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களை விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.