நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதால் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதால் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம் அடர்ந்த காடுகளை கொண்ட மாவட்டமாகும். இதனால், வனவிலங்குகள் அடிக்கடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கம். இப்படி வரும் வன விலங்குகள் சில நேரங்களில் மனிதர்களைத் தாக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.
இந்நிலையில், உதகை அருகே உள்ள தாம்பட்டி சந்திப்பில் சுந்தர் (60) என்ற முதியவரை சிறுத்தை புலி ஒன்று தாக்கியதாக அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தின் போது முதியவர் ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது அந்த முதியவர் முகம், கழுத்து பகுதியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.