கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நீருக்கடியில் மூழ்கி கிடந்த கோட்டைக்கோவில், வறட்சியின் காரணமாக வெளியே தெரிவதால், இதனை வறட்சியின் அடையாளம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நீருக்கடியில் மூழ்கி கிடந்த கோட்டைக்கோவில், வறட்சியின் காரணமாக வெளியே தெரிவதால், இதனை வறட்சியின் அடையாளம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் பவானி நதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியே பவானிசாகர் அணையை சென்றடைகிறது. இவ்வாண்டு பவானி நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் வழக்கமாக பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துப் போனதால் பவானி ஆற்றில் நீரின் வேகம் குறைந்து காணப்படுகிறது. வழக்கமான மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் பவானி ஆற்றில் இணையும் காட்டாறுகளான கல்லாறு, காந்தையாறு, மாயாறு போன்றவற்றிலும் நீர்வரத்து இல்லை. இதனால் பவானிசாகர் அணைக்கு செல்ல வேண்டிய தண்ணீர் போதிய அளவிற்கு இல்லாமல் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான காந்தவயல், லிங்காபுரம், புதுக்காடு, ஜெ.ஜெ.நகர், குனுக்குமடுவு, மொக்கைமேடு, இரும்பறை போன்ற இடங்களில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.
இதனால், அணையின் பின்புற பகுதியான மொக்கைமேடு என்னும் இடத்தில் இதுவரை நீருக்கடியில் மூழ்கிக் கிடந்த பலநூறு ஆண்டுகள் பழமையான தண்டல் நாயக்கன் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டைக்கோவில் வெளியில் தெரிகிறது. மிக அழகிய சிற்ப வேலைபாடுகளோடு வெறும் கற்களால் செதுக்கப்பட்ட இக்கோவில் ஒரு கோட்டை போல் இருந்ததால், இதனைக் கோட்டைக்கோவில் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. நாளடைவில், தண்டல் நாயக்கன் கோட்டை எனவும் அழைக்க துவங்கியுள்ளனர். இப்பகுதியில், பவானி ஆற்றின் குறுக்கே கடந்த 1955-ம் ஆண்டு அணை கட்டி, இதில் நீரை தேக்க துவங்கியவுடன் இக்கோட்டை கோவில் நீருக்கடியில் மூழ்கியது. பெரும்பாலும் ஆண்டுக் கணக்கில் இக்கோட்டை கண்களுக்கு புலப்படாமல் நீருக்குள்ளேயே மூழ்கி கிடப்பது வழக்கம்.
கடந்த அறுபது ஆண்டுகளில் ஒருசில சமயங்களில் மட்டுமே இந்த கோட்டைக்கோவில் வெளியில் தெரிந்துள்ளது. எப்போதெல்லாம் மழை குறைந்து இப்பகுதியில் வறட்சி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இக்கோட்டைக் கோவில் நீருக்குள் இருந்து வெளிவந்து காட்சியளிக்கும் என இப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது, காட்சியளிக்கும் தண்டல் நாயக்கன் கோட்டையை வறட்சியின் அடையாளமாகவே பார்ப்பதாகவும், போதிய மழையின்றி விவசாயம் மட்டுமில்லாமல் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், விரைவில் மழைபெய்யும் என கிராம மக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.