காற்று மாசு கணக்கிடும் கருவியின் தகவல் பலகையை சுவிஸுக்கான இந்திய தூதர் திறந்து வைத்தார்
கோவை: கோவை மாநகராட்சி வளாகத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் வைக்கப்பட்டிருந்த காற்றின் மாசு கணக்கிடும் கருவியின் தகவல் பலகையை சுவிட்சர்லாந்து நாட்டின் இந்தியா மற்றும் பூடான் தூதர் ஆண்ட்ரியாஸ்பாம் திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சிக்கு வருகை தந்த சுவிட்சர்லாந்து நாட்டின் இந்தியா மற்றும் பூடான் தூதர் ஆண்ட்ரியாஸ்பாம், கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். மாநகராட்சியில் நடைபெற்று வரும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளருடன், ஆண்ட்ரியாஸ்பாம் கலந்துரையாடினார்.
பின்னர், மாநகராட்சி நுழைவு வாயில் முன்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் கெப்பாசிட்டீஸ் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பில் வைக்கப்பட்டிருந்த காற்றின் மாசு கணக்கிடும் கருவியின் தகவல் பலகையினை இந்திய தூதர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, கோவை, கௌலிபிரவுன் சாலையில் உள்ள உழவர் சந்தையில் 1 டன் அளவில் குப்பையிலிருந்து மீத்தேன் வாயு எடுத்து மின்உற்பத்தி செய்து உழவர் சந்தையிலுள்ள விளக்குகளுக்கு மின்சாரம் பயன்படுத்தும் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ. 35 லட்சம் மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கும் வகையில் கல்வெட்டினை திறந்து வைத்து, தூதர் ஆண்ட்ரியாஸ்பாம், கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் முன்னிலையில் விளக்கிப் பேசினார்.

பின்னர், உழவர் சந்தையில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதையும், பொதுமக்களுக்காக குறைந்த விலையில் விவசாயிகளின் மூலமாக காய்கறிகள் விற்கப்படுவதையும் இந்திய தூதர் நேரில் பார்வையிட்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சூன்யா திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதியில் 22 மற்றும் 24-ம் வார்டுகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தள்ளுவண்டிகள், குப்பைத் தொட்டிகள் உபகரணங்களை கோவை மாநகராட்சி பணியாளர்களுக்கு அவர் வழங்கினர்.
மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்குவதற்கான விழிப்புணர்வு பணிகள் பற்றி தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் இந்திய தூதர் ஆண்ட்ரியாஸ்பாம் கேட்டறிந்தார். மேலும், மரக்கன்றுகளை நட்டு மரம் நடும் பணிகளை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.