வெள்ளலுார் குப்பை கிடங்கில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் தீ விபத்துகளை கண்காணிக்க தவறியதாக மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் தீ விபத்துகளை கண்காணிக்க தவறியதாக மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், மறு சுழற்சிக்காக வெள்ளலுார் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கொட்டப்படுகிறது. சுமார் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில், 250 ஏக்கர் அளவிற்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளால், சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதோடு, நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்து வருகிறது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரமற்ற சூழலை உருவாக்கி வரும் இந்த குப்பைக் கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் பூண்டதோடு, அங்கு வாழும் மக்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர் வரை மூச்சு திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை சிம்பிளிசிட்டி சிறப்பு செய்தி தொகுப்பு ஒன்றினை வெளியிட்டது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேங்கியுள்ள குப்பையின் அளவைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தீ பற்ற வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நகர பொறியாளர் நடராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து, தீ விபத்து தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இந்தக் குழுவில் மாநகராட்சிக் கண்காணிப்புப் பொறியாளர் என்.நடராஜன், செயற்பொறியாளர் லட்சுமணன், கிழக்கு மண்டல செயற்பொறியாளர் வி.பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர்.சந்தோஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர் தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து குப்பை கிடங்கை முறையாக கண்காணிக்க தவறியதாக, மேற்கு மண்டல உதவி பொறியாளர் மூர்த்தியை நேற்று முதல் பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பொறுப்பாளர் ரவிக்கண்ணன், நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.