அண்மை காலமாக சிறை கைதி மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், உயர்நீதிமன்றம் செய்த பரிந்துரையை ஏற்று சிறைவாசிகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: அண்மை காலமாக சிறை கைதி மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், உயர்நீதிமன்றம் செய்த பரிந்துரையை ஏற்று சிறைவாசிகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு, சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள், தண்டனை காலம் முடிவதற்குள், சிறையிலேயே மரணம் அடைந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக, தஸ்தகீர், சபூர் ரஹ்மான், ஒஜீர் தற்போது ரிஸ்வான் என இஸ்லாமிய கைதிகள் நான்கு பேர் மருத்துவ குறைபாடுகளால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அபுதாகிர் என்ற சிறைவாசி உயிருக்கு ஆபத்தான சூழலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீரான் மைதீன் என்ற மற்றுமொரு சிறைவாசி 2 கிட்னி செயலிழந்து ஆபத்தான சூழலில் உள்ளார். அதேபோல, மற்ற சிறைவாசிகளும் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொடர் சிறை மரணம் குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் மலரவன் கூறியதாவது:- கடந்த பிப்.,27-ம் தேதியன்று, கோவை மாவட்ட மனித உரிமை நீதிபதியிடம் மத்திய சிறையில், அதிகரித்து வரும் சிறைவாசிகளுக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், இழிவுப்படுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கைக் கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளித்திருந்தோம். அவரும் சிறைவாசிகள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒருசிறை கைதி மரணம் என்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் சிறைவாசிகளின் நீண்ட நாள் சிறை என்பது உடல் மற்றும் மனஅளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், ஆபத்தான சூழலில் உள்ள சிறைவாசிகளுக்கு உரிய சிகிச்சை கொடுக்க தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது. இதற்கு சிறந்த மருத்துவர்களை வைத்து உயரிய சிகிச்சை கொடுக்க போதிய வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும், இவ்வாறு தெரிவித்தார்.
வாழும் உரிமை சட்டம் 21
உயிர் வாழும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமக்களுக்குத் தருகிறது. இந்த சட்டத்திற்கு உட்பட்டு தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிறைவாசியாக இருந்தாலும் சரி சிறைக்கு வெளியே உள்ளவராக இருந்தாலும் சரி எந்த பாரபட்சமும் இன்றி வாழும் உரிமையில் மருத்துவம் இன்றியமையாததாக உள்ளது.
அதன்படி, கைதிகளின் உயிர்காக்க சிறைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சட்டப் பிரிவு 161
மாநில அரசு ஆண்டுதோறும் நன்னடத்தையோடு இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம். அதன்படி, 1992 அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, 230 சிறைவாசிகள் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். 1993 மீண்டும் 132 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தி.மு.க., ஆட்சியில் 2007-ல் அண்ணா பிறந்த நாளையொட்டி 17 பேரும், 2008-ல் 1,405 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல, நன்னடத்தையின் அடிப்படையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை மாநில அரசு தனது அதிகாரத்தில் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை தொடர் சிறை மரணங்களால் எழுந்துள்ளது.
ஆக மனிதநேயமும், தனிமனித உரிமைகளும் நம் நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் உள்ளது. அதை முறையாக செயல்படுத்தினால் தான் மனிதம் மலரும் என்பதே ஒட்டு மொத்த மனிதநேய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




