கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வால்பாறை இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி: கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வால்பாறை இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

வால்பாறையில் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் சியாமளா தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “ஒழிப்போம் ஒழிப்போம் கள்ளச்சாராயத்தை ஒழிப்போம்”, “கள்ளச்சாராயம் குடித்தால் கண்பார்வை போய்விடும்” “கள்ளச்சாராயம் உயிருக்கு கேடு” “கள்ளச்சாராயம் குடித்தால் மலட்டுத்தன்மை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைளுடன் கோஷமிட்டு வால்பாறை பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வால்பாறை முக்கிய வீதிகளின் வழியாக தபால் நிலையம் சென்றடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்து பேரணியாக வாழைத்தோட்டம் வழியாக கல்லூரி வளாகம் வந்தடைந்தனர்.
இந்த பேரணியில் வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன், கல்லூரி துணை முதல்வர் குணசுந்தரி, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.