பேராசிரியர் நியமனத்திற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
கோவை: பேராசிரியர் நியமனத்திற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முன்னாள் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, இருவருக்கும் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அதாவது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். கோவையை விட்டு வெளியே செல்லக்கூடாது. சாட்சியங்களைக் கலைக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.