தமிழகத்தில் பெரியார் சிலை விரைவில் அகற்றப்படும் என்ற எச். ராஜாவின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பெரியார் சிலை விரைவில் அகற்றப்படும் என்ற எச். ராஜாவின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றியது போல் நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்று எச்.ராஜா தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், எச். ராஜாவைக் கண்டித்து தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றை கீழே காணலாம்.

மு.க.ஸ்டாலின் : தந்தை பெரியாரின் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பா.ஜ.க.,வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தொடர்ந்து வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. என்றார்.
வைகோ : பெரியார் சிலையை அகற்றுவதாக சொன்னவனுக்கு சொல்கிறேன். இடம், நேரம் கூறி என் தலைமையில் தடுக்கும் படை வரும், அந்த நபரின் கை, கால் துண்டு, துண்டாக வெட்டப்படும். அருவா பிடிச்ச கையிடா இது. இவ்வாறு கூறியுள்ளார்.
திருமாவளவன் : பெரியார் சிலையை தொட எச்.ராஜா மட்டுமல்ல அவருடைய முப்பாட்டன் வந்தாலும் முடியாது, என்றார்.
கே.பாலகிருஷ்ணன் ( மார்க்சிஸ்ட்) : இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது, நாளை தமிழகத்தில் பெரியார் சிலைக்கும் அதுதான் என்று பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கடந்த காலத்திலும் இப்படிப்பட்ட வெறிப்பேச்சுக்கள் தடுக்கப்படாததால் எச். ராஜாவின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனக் கூறியுள்ளார்.
சீமான் : எச்.ராஜாவின் நோக்கமே பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள் அல்லவா, பரபரப்புக்கு ஆளாகும் ஆளாக இருக்க வேண்டுமென்பதே. அவர் நோக்கமே விளம்பரம் தேடுவது தான். பெரியார் சிலையை தொட்ட அன்று தெரியும் என்ன நடக்கும் என்று. என்றார்.

கவிஞர் வைரமுத்து : பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும். பெரியார் சிலையில் கைவைத்தால் தேனிக்கூட்டில் கைவைத்த கதையாகிவிடும். என்றார்.
டிடிவி தினகரன் : பெரியார் சிலை உடைக்கப்படும் என நாகரிகமற்ற முறையில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறினார்.
குஷ்பு (டுவிட்டர்) : கமல், ரஜினியை ஏளனம் செய்யும் முதுகெலும்பற்ற அ.தி.மு.க., அமைச்சர்கள் ஹெச்.ராஜாவை எதிர்ப்பார்களா?.. எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜவாஹிருல்லா : வன்முறைக்கும், மோதலுக்கும் தொடர்ந்து வழி வகுக்கும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். எனக் கூறியுள்ளார்.
வேல்முருகன் : பெரியார் சிலை மீது கை வைத்தால் ஹெச்.ராஜா கை இதுக்காது. என்றார்.

நடிகர் கமலஹாசன் : சிலையை உடைப்பேன் என்று சொல்லி, சிலையாய் இருந்த பலருக்கு உயிர் கொடுத்து, நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றி விட்டார், காவி எச்ச ராஜா. இவ்வாறு கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் : “ஹெச்.ராஜாவின் கருத்து அதிகாரப்பூர்வ கருத்து அல்ல. சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் கருத்துக்கெல்லாம் கட்சி பொறுப்பேற்க முடியாது”
சுப.வீரபாண்டியன் : உலகத் தலைவர்களில் ஒருவரான லெனின் சிலை உடைப்பு நாம் நாட்டிற்கே அவமானம். பெரியார் சிலையும் உடைபடும் என்பது திமிரின் உச்சம்.
ஜி.வி.பிரகாஷ் : பெண்ணடிமையை சாதியை மூட நம்பிக்கைகளை உடைத்த இரும்பு மனிதர் பெரியார்.! அவரின் சிலைகள் அப்புறப்படுத்தபடும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது..!
இவ்வாறு கூறியுள்ளனர்