நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், குன்னூரில் தற்போதே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள 30 வார்டுகளுக்கு நீர் விநியோகிக்கும் முக்கிய நீராதாரமான ரேலியா அணையில் மட்டுமே 39 அடி நீர் இருப்பு உள்ளது. கோடை கால தேவைக்காக இந்த அணையிலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறிய அளவிலான பந்துமி, ஜிம்கானா, கரடிபள்ளம் ஆகிய பிற நீராதாரங்களை தண்ணீர் தேவைக்காக மக்கள் நம்பியிருந்தனர்.
இந்நிலையில், பனிக்காலம் மற்றும் பருவமழை பொய்த்துப் போனதால் பந்துமி நீர்த்தேக்கத்துக்கான நீர்வரத்து நின்று விட்டது. இதனால், நீர்வரத்து இல்லாமல் பந்துமி நீர்த்தேக்கம் முற்றிலுமாக வறண்டு விட்டது. தற்போது, நீரில்லாமல் நீர்த்தேக்கம் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் குன்னூர் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் தேவையை சமாளிக்க மக்கள் நம்பியிருந்த நீராதாரங்கள் ஒவ்வொன்றாக வறண்டு வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது.