குறிச்சி குளப்பகுதியில் சுற்றித் திரியும் ஒட்டகம் கோவை வறட்சியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பதை நினைவுபடுத்தியது.
கோவை: குறிச்சி குளப்பகுதியில் சுற்றித் திரியும் ஒட்டகம் கோவை வறட்சியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பதை நினைவுபடுத்தியது.
கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பராமரிப்பின்றி விடப்பட்ட பல்வேறு வகையான கால்நடை இனங்களைக் காண முடியும். வாழ்வாதாரத்தைத் தேடி நீர் நிலைகளுக்கு வரும் அவை பெரும்பாலும் சாலையோரங்களில் சுற்றித்திரிவது வழக்கமான ஒன்று. அவ்வாறு சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று தான்.
இந்த நிலையில், பாலைவன பிரதேசங்களில் வாழும் ஒட்டகங்கள் சில கோவை குறிச்சி குளத்தின் அருகில் சுற்றித் திரிந்தன. "எதோ ஒரு பாலைவன பிரதேசத்திற்கு அருகே சென்றுவிட்ட கொண்டிருக்கும் பீலிங்..!" கோவையில் தற்போது வீசும் அனல்காற்றும், வாட்டியெடுக்கும் வெயிலும், வறட்சியும் தற்போது இந்த ஒட்டகங்களும் கோவையை ஒரு வருங்கால பாலை வனமாகவே காண்பிக்கின்றன.
இந்த புகைப்படத்தை எடுத்த சமூக ஆர்வலர் உமேஷ் இது குறித்து கூறியதாவது :-
குளத்தில் நான்கு ஒட்டகங்கள் உள்ளன. இதனை வாழ்வாதாரத்திற்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி இது தவறு. இது போன்று சட்டவிரோதமாக விலங்குகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் பராமரிப்பின்றி விடப்பட்ட கால்நடைகள் உணவு உண்பதற்கு தீவனங்கள் கிடைப்பதில்லை. இதனால், அவை பசுந்தீவனங்களை தேடி குளங்கள் மற்றும் குட்டைப் பகுதிகளுக்கு செல்கின்றன. அங்குள்ள நீர் நிலைகளில் அவை நீரை அருந்துகின்றன. சில நேரங்களில் அப்பகுதியிலேயே உயிரிழந்துவிடுகின்றன. இறந்துபோன கால்நடை தண்ணீருக்குள் மிதப்பதால் அங்கு நீர் மாசுபாடு ஏற்படுகிறது.
கால்நடைகளிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்கும் நம் மக்கள், அதனைப் பாதுகாப்பான சூழலில் வளர்க்கத் தவறுவதால் இந்த பிரச்சனைகள் எழுகின்றன. தற்போது கோவையை வளம் வரும் இந்த ஒட்டகங்கள் பாலை வனத்தை நினைவுபடுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்காவிட்டால் உண்மையாகவே கோவை ராஜஸ்தான் பாலைவனமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, சூழ்நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் நீர் நிலைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பது சூழலியல் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.