கால் டேக்ஸியில் கோவையில் இருந்து திருசூருக்கு ரூ. 3 மட்டுமே வைத்து கொண்டு 350 கிலோ மீட்டர் வரை பயணித்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை : கால் டேக்ஸியில் கோவையில் இருந்து திருசூருக்கு ரூ. 3 மட்டுமே வைத்து கொண்டு 350 கிலோ மீட்டர் வரை பயணித்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சியை சேர்ந்த முஸ்தபா என்பவர் நேற்று மாலை திருச்சியில் இருந்து பேருந்து மூலமாக கோவையில் உள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கி உள்ளார். அப்போது, தான் கேரள மாநிலம் திருசூருக்கு செல்ல வேண்டும் என கூறி அங்கிருந்து கால் டேக்சி ஒன்றை பிடித்து சென்றுள்ளார். அங்கு உள்ள தனது உறவினர்களிடம் இருந்து கட்டணத்தை பெற்று தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த கால் டேக்சியின் ஓட்டுனரும் தனது சொந்த பணத்தை செலவு செய்து அவரை திருசூருக்கு அழைத்து சென்று உள்ளார்.
இந்நிலையில், அங்கு அவர் வைத்து இருந்த முகவரியை கண்டுபிடிக்க முடியாததால் பல இடங்களில் தேடிய பின்னர், மீண்டும் கோவைக்கு வந்து உள்ளார். அப்போது, வடவள்ளி பகுதிக்கு அருகே வந்த போது, ஓட்டுனர் கனகராஜ் பயணித்த கட்டண பணத்தைக் கேட்டு உள்ளார். அப்போது, வாக்கு வாதத்தில் ஈடுபட்ட முஸ்தபா பணம் தர முடியாது என கூறியதோடு ஓட்டுனரை தாக்கவும் முற்பட்டுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி முஸ்தபாவை கடுமையாக தாக்கினர். அப்போது, ரூ. 3 மட்டும் வைத்து கொண்டு 350 கிலோ மீட்டர் வரை அவர் பயணித்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.