கோவை: சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் ஆவின் விற்பனை நிலையங்களைக் கோவை மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அதிரடியாக அகற்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால், சில தனியார் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் கைகோர்த்து மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். அவர்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மவுனம் சாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வடவள்ளியை அடுத்த வி.என்.ஆர் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான 11 சென்ட் பூங்கா இடம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, கோவையின் பிரபல உணவகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.

இதையறிந்த நகராட்சி நிர்வாக ஆணையர், 10 நாட்களில் பூங்கா இடத்தை மீட்டு அதை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மதம் 15-ம் தேதி கோவை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். ஆனால், ஐம்பது நாட்கள் ஆகியும், அவ்விடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.
இது தொடர்பான ஆவணங்களை ரிசர்வ் சைட் மீட்பு சமூக ஆர்வலரான எஸ்.பி. தியாகராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திரட்டியுள்ளார். ஆக்கிரமிப்பு குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 11 சென்ட் பூங்கா இடத்தில் குடியிருப்புகள் உள்ளது. அந்த 11 சென்ட் இடத்திற்குப் பதிலாக 70 சென்ட் நிலத்தை மாநகராட்சிக்குத் தருவதாக ஆக்கிரமிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், அந்த இடம் சட்ட விரோதமாக வணிகப் பயன்பாட்டில் உள்ளதைக் கண்டறிந்த நகராட்சி நிர்வாகம், நிலப் பரிமாற்றத்திற்கு தடைவிதித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
ஆனால், நகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குழந்தைகள் விளையாடும் பூங்கா இடம் இன்று வரை சட்டவிரோத வணிகப் பயன்பாட்டில் தான் உள்ளது. இவை மட்டுமல்ல, மாநகராட்சிக்குச் சொந்தமான பல நிலங்கள், ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. இதில் அரசியல் தலையீடுகள் அதிகம் உள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை" என்றார்.
சாலையோரத்தில் சிற்றுண்டி கடைகள் அமைத்திருப்பவர்களிடம் "இது ஆக்கிரமிப்பு, பொதுமக்களுக்கு இடையூறாக எப்படி கடை அமைக்கலாம்...?" என்று சட்டம் பேசி அவர்களை விரட்டும் மாநகராட்சி அதிகாரிகள், பணபலம் உள்ளவர்கள் மீதும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாரபட்சம் காட்டுகின்றனர்.
அதிகாரிகளின் இது போன்ற செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன "என்னங்க சார் உங்க சட்டம்...?"