நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
கோவை, ஜனவரி 25
கோவையில் தேசிய வாக்காளர் தினப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது, பந்தயச் சாலை வழியாக தாமஸ் பூங்காவில் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து, அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு, புதிய வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் அவர் வழங்கிக் கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.