விளக்கு கம்பங்கள் இங்கே, விளக்குகள் எங்கே?


கோவை, டிசம்பர் 28

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட லாலி ரோடு சந்திப்பு, நகரின் பரபரப்பான போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்றாகும். மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து பிரியும் கொளலி பிரௌன் சாலை, ஆனைக்கட்டி சாலை மற்றும் மருதமலை சாலை போன்ற முக்கிய சாலைகள் இந்தச் சந்திப்பில் இணைவதால், இங்குப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, மருதமலை சாலையில், இரவு நேரங்களிலும் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கும். 

மாலை மற்றும் இரவு நேரங்களில் மருதமலை சாலையில் பயணிப்பவர்களுக்கு வசதியாக லாலி ரோடு சந்திப்பிலிருந்து, மருதமலை செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன வடிவிலான மின் விளக்குக்கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், வேளாண் பல்கலைக்கழகம் நுழைவு வாயில் வரை அமைக்கப்பட்டுள்ள 35 விளக்குகம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால், அவை யாருக்கும் உபயோகமில்லாத வெற்று கம்பங்களாக காட்சியளிக்கின்றன.



‘சாலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் பழைய விளக்கு கம்பங்கள் பழுதானதால், ஓராண்டிற்கு முன்பு இந்த நவீன விளக்குகம்பங்கள் அமைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை வேளாண் பல்கலைக்கழகம் வரை உள்ள விளக்குகம்பங்களில், விளக்குகள் பொருத்தப்படவில்லை. பழுதான பழைய விளக்கு கம்பங்களின் வெளிச்சத்தில் தான் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கிறன. சில நேரங்களில் அவையும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது’ என்றார் மருதமலை சாலையில் உணவகம் நடத்திவரும் திரு.முருகேசன். 

இந்தச் சாலையை ஒட்டி ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன, அவை அனைத்தும் குறுகிய சாலை மற்றும் தெருக்கள் வழியாக மருதமலை சாலையோடு இணைகின்றன. விளக்குகள் எரியாததால், பெரும்பாலும் இந்தத் தெருக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால், சாலையை அடைவதில் பல சிக்கல்களைச் சந்தித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் புகாரளிக்கின்றனர்.



‘வெளிச்சம் இல்லாததால், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் தொடர்ந்து வாகன விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன. தெருக்கள் இருட்டாக இருப்பதால், பெண்கள் மாலை நேரங்களில் சாலையை கடக்க முடிவதில்லை. இதனால், வேலைக்குச் சென்று திரும்பும் பெண்கள் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.' என்றார் லாலி ரோடு சந்திப்பின் அருகில் வசித்துவரும் திருமதி.சாந்தி. 

இந்தப் பிரச்சனை குறித்து மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலர்களிடம் விசாரித்தபோது, நிதிப் பற்றாக்குறை காரணமாக, கம்பங்களில் மின்விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை எனவும், கூடிய விரைவில் நடவிடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். 

'இவை நவீன மின்கம்பங்கள் தான் ஆனால், விளக்குகள் இல்லை. அதன் வடிவமே, இரட்டை இலை சின்னத்தைப் போல் உருவாக்கப்பட்டுள்ளது. கட்சியை வளர்க்க நினைக்கும் ஆட்சியாளர்கள், கடுகளவேனும் மக்கள் நலனைப் பற்றி கவலைப்படுவதில்லை. இவற்றை அமைக்கச் செலவழித்த நிதியை, பழைய விளக்கு கம்பங்களை பழுது பார்க்க செலவழித்திருந்தால், மக்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும். புதிய நவீன விளக்கு கம்பங்கள் அமைக்க எவ்வளவு செலவாகும் என்ற அறிவு கூட இல்லாமலா, ஒப்பந்தம் விடப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகமின்மையே இவை அனைத்திற்கும் காரணம்' என்று கொந்தளித்தார், முப்பது ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்துவரும் ஓர் குடியிருப்புவாசி. 

பெரும் விபத்துகள் ஏற்படும் முன், போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, உடனடியாக இந்த கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...