கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை : அவதியுறும் நோயாளிகளின் அலறல் அரசுக்கு கேட்குமா?



கோவை, நவம்பர் 24

பசுமையும், வளமும் நிறைந்த அழகிய மாவட்டம் நமது கோவை மாவட்டம். 

அன்பையும், அமைதியையும் நேசிக்கும் மக்கள் கூட்டம் உருவாக்கிய  இந்த ஸ்மார்ட் சிட்டிக்குள் நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறது கோவை அரசு மருத்துவமனை. 

கோவை மக்கள் மட்டுமல்லாது இவ்வூருக்கு வரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த நோயாளிகளை கனிவுடன் கவனிக்கும் பொருட்டு 13.5 ஏக்கர் நிலப்பரப்பில் படர்ந்து நிற்கிறது இம்மருத்துவமனை.

இங்கு நாளொன்றுக்கு 8 ஆயிரம் வெளி நோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட  உள் நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.

பல்வேறு நோய்கள், விபத்துக்கள், மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க இங்கு 42 மருத்துவத்துறைகள் உள்ளன. 




செவிலியர்கள் 

இம்மருத்துவமனையில் உள்ள நூற்றாண்டு கட்டிடங்கள் உட்பட 100 வார்டுகளில் சேர்த்து மொத்தம் 1182 அனுமதிக்கப்பட்ட படுக்கைகள் (Sanctioned Beds) உள்ளன. 

இதனோடு, ஆயிரத்திற்கு மேற்பட்ட கூடுதல் படுக்கைகளும், தீவிர சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சை வார்டுகளில் தலா 30 படுக்கைகள் என ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.

மொத்தமாக  2,500-க்கும் மேற்பட்ட  படுக்கைகள் உள்ள இந்த மருத்துவமனையில் வெறும் 218 செவிலியர்களே பணியில் உள்ளனர். 

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காக்கும் இந்த மருத்துவமனைக்கு கடந்த 30 வருடங்களாக புதிதாக ஒரு செவிலியர் கூட நியமிக்கப்படவில்லை.

அவ்வப்போது பணி நியமனம் காரணமாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள நர்சுகள் 100 பேர் இந்த மருத்துவமனைக்கு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவ பணியாளர்கள் கூறுகையில், "தற்காலிகமாக பணிக்கு வரும் செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனை தொடர்பான அறிமுகம் குறைவாகவே இருப்பதால் முழுமையான பணியை எதிர்பார்ப்பது கடினம்" என்றனர்.

பற்றாக்குறை

அரசின் உத்தரவுப்படி மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு 6 படுக்கைககுளுக்கும் 1 செவிலியர் நிமிக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், தற்போது அரசு மருத்துவமனையில் இருக்கும் செவிலியர்கள் கணக்கை பார்க்கும் போது மேலும் 200 செவிலியர்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. 

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் தலா ஒரு செவிலியர் நிமிக்கப்பட வேண்டும். தற்போது 30 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன. ஆனால், நோயாளிகள் உயிரை காப்பாற்றும் செவிலியர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 

"மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக 25 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் ஆட்சியில் தான் அதிகபட்ச செவிலியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளோம்" என்று சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இவ்வாறு நியமிக்கப்படும் செவிலியர்கள் அரசு ஊழியர்களாக அல்லாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுகின்றனர். நான்கு வருட பணி மூடிந்த பிறகே அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுகிறது.

இந்த ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள் ஒருவர் கூட கோவை அரசு மருத்துவமனை பணிக்கு நியமிக்கப்படவில்லை. 

இந்த மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக செவிலியர்களோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை. இது அரசின் அலட்சியப்போக்கையே காட்டுகிறது. 

செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளை கவனிப்பதில் தொய்வு ஏற்படுவதாகவும், பணிச்சுமை அதிகரித்து மன அழுத்தம் ஏற்படுவதாகவும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கடந்த வாரம் டீன் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மருத்துவமனை நிர்வாகம், செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக இருமுறை அரசுக்கு அறிக்கை அளித்தும் இதுவரை செவிலியர்கள் நியமனம் தொடர்பாக மூச்சுவிடாமல் இருக்கிறது சுகாதாரத்துறை செயலர் அலுவலகம். 

செவிலியர்கள் மட்டுமல்லாது  துப்புரவு பணியாளர்களை கூட அரசு ஊழியர்களாக நியமிக்கப்படுவது இல்லை. 

இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த 2008-ம் ஆண்டில் 80-ஆக இருந்த துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை தற்போது 18-ஆக குறைந்துள்ளது.    ஒவ்வொரு பணியாளர் பணி ஓய்வு பெரும்போதும் அந்த இடத்தை நிரப்பாமல் வைத்திருப்பதே ஊழியர்கள் குறைவுக்கு காரணமாக உள்ளது" என்றார்.

மக்களின் உயிர் சம்மந்தமான பிரச்சனையில் ஒரு அரசு இவ்வளவு அலட்சியப்போக்கை கடைபிடிப்பது ஏற்க முடியாத ஒன்று எனவும், உடனடியாக தமிழக மருத்துவத்துறை மீது கூடுதல் கவனம் செலுத்தி மக்களை நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...