கோவை, நவம்பர் 11: கோடநாடு எஸ்டேட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக, எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் வருமான வரித்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் கர்சன் எஸ்டேட்டில் 12 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ஈளாடா பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் சோதனை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், சசிகலாவின் ஆதரவாளரான சஜ்ஜீவன் வீடு மற்றும் மர மில்லில் சோதனை நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை சோதனை நடத்திய அதிகாரிகள், கர்சன் எஸ்டேட்டில் உள்ள ஆவணங்களை சரி பார்த்தனர். பின்னர் அங்குள்ள அறையில் ஆவணங்களை வைத்து பூட்டினர்.
இந்நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும் கோடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட் மற்றும் சஜ்ஜீவனின் வீட்டில் சோதனை நடந்தது. மேலாளர் நடராஜனிடமும் விசாரணை தொடர்ந்தது. கோடநாடு, கர்சன் மற்றும் அலக்கரை எஸ்டேட்களை 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வந்த பின்னர், எஸ்டேட் நிர்வாகத்திடம் இருந்த பணம், ஒவ்வொரு தொழிலாளர்களின் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்ததாக தெரிகிறது.

கர்சன் எஸ்டேட் ஆள்நடமாட்டம் இல்லாத வனாந்தர பகுதியில் அமைந்துள்ளதால், சசிகலாவின் சொத்து பத்திரங்கள் மற்றும் முக்கிய தொழிற்சாலைகளின் ஆவணங்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பணம் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது,பல்வேறு சிறு குறு தொழிற்சாலைகள் நலிவடைந்ததாகவும், அந்த தொழிற்சாலைகளை தினகரன் குறைந்து விலையில் வாங்கியும், சில தொழிற்சாலைகளில் பண முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் கர்சன் எஸ்டேட்டில் பதுக்கி வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
காலை முதல் பல மணி நேரம் சோதனை நடந்தது. மேலும், சஜ்ஜீவனின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
பணியில் தொழிலாளர்கள்: இரு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், எஸ்டேட்டில் தொழிலாளர்கள் தொடர்ந்து எவ்வித சலசலப்பும் இல்லாமல் தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர். எஸ்டேட்டில் சோதனை நடந்து வருவதாக எந்த அறிகுறியும் அவர்களிடம் தெரியவில்லை.
