கோவை, நவம்பர் 6: தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய தமிழக அரசு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என விவசாயி சங்கத்தினர் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-
"தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை செடிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வறட்சி காரணமாக தமிழகத்தில் அழிந்து வந்த பல மூலிகை செடிகள் தற்போதைய பருவ மழை காரணமாக துளிர் விட்டு வரும் இந்நிலையில் அவற்றை முறையாக பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க 'தனி குழு' ஒன்றை அமைக்க அரசு முன்வர வேண்டும்".
முன்னதாக, மூலிகை செடிகளை ஏந்தியவாறு விவசாயி சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.