கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சமூக பணித் துறை மாணவர்கள் சார்பாக ரத்தினபுரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.

பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் செயல்முறைகள், டெங்கு கொசு உருவாவதை தடுப்பது மற்றும் சுத்தமான சூழலை உருவாக்குவது பற்றிய தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக கோவை மாநகராட்சியோடு இணைந்து பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட சமூக பணித் துறை மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

'மக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் போன்ற நோய்கள் தேங்கி நிற்கும் தண்ணீர், அகற்றப்படாத குப்பைகள் போன்ற சுகதாரமற்ற சுற்றுச்சூழல் காரணமாகத் தான் உருவாகிறது. எனவே இதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். மாநகராட்சி நிர்வாகிகளோடு இணைந்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார் மாணவி மதுபாலா.

இந்த பிரச்சாரத்தில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய வீதி நாடகம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிக்கப் பட்டது. பின் ரத்தினபுரி முதல் பவர் ஹவுஸ் வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் பங்கேற்றார்.