கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வரும் அக்டோபர் 25ம் தேதியன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பனூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்சின்னம்பாளையம், காளியாபுரம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனப்பட்டி, கப்பளாங்கரை, பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கிலிபாளையம், மூலனூர், கிட்டசூரம்பாளையம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மாளபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அக்டோபர் 16 முதல் 25ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி, சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் அக்டோபர் 25ம் தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.