கோவை மாவட்டத்தில் உள்ள பரபரப்பான சாலைகளில் ஒன்றான மேட்டுப்பாளையம் சாலை ஜி.என். மில்ஸ் அருகே கடந்த இரு நாட்களாக 3 குதிரைகள் கேட்பாரின்றி சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த குதிரைகள் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, சாலையில் பயனிக்கும் வாகன ஓட்டிகள் ஹாரன் ஒலி எழுப்பும் போது குதிரைகள் மிரண்டு ஓடத் துவங்குகின்றன . இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, காவல்துறையினர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அந்த சாலையை அன்றாடம் பயன்படுத்தும் ஐடி ஊழியர் ராஜ்குமார்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், 'தடாகம் பகுதி விவசாயிகளின் குதிரைகளே இவை. சுமை தூக்குவதற்கு பயன்படுத்திவிட்டு பின் சாலையின் ஓரம் உள்ள செடிகளை மேய்வதற்காக விட்டு விடுகின்றனர். அவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் இடையூறு ஏற்படுகிறது' என்றனர்.

கால்நடை ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், 'இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மக்கள் தொடர்புடைய அமைப்புகளிடம் புகார் அளிக்க வேண்டும். அந்த புகாரின் பேரில் இதுபோன்ற குதிரைகள் கைப்பற்றப்படும்' என்றார்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது வரை பொதுமக்களிடம் இருந்து எவ்வித புகாரும் வரப்பெறவில்லை. புகார் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குதிரையின் உரிமையாளருக்கு அபராதம் உள்ளிட்டு தண்டனை வழங்கப்படும்' என்றார்.