பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் பாரதி பிறந்த தேதியான 11-ம் தேதியினை நினைவு கூறும் வகையில் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி நடைபெற்ற "வையத் தலைமை கொள்” எனும் தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கணபதி தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசுகையில், வரும் டிசம்பர் 11-ம் தேதி பாரதியின் பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ”மகாகவி பாரதியார் வாழ்நாள் சாதனையாளர் விருது” எனும் பெயரில் பாரதியை நினைவு கூறும் வகையில் பாரதியார் குறித்தும், தமிழ்மொழி குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஒரு மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கென தனியாக ஒரு குழு அமைத்து விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுவார். மேலும், நமது பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களிடையே கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி ஒவ்வொன்றிலும் முதல் 3 இடங்களில் வரும் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கும், இணைப்புக்கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் ஆக 18 மாணவர்களுக்கு ”இளம் பாரதி” விருது வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.
தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கணபதி, பாரதி பிறந்தநாள் விழாவில் மாணவர்கள் பங்கேற்கும் கலைவிழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். என்றார்.