கோவை தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள வேப்ப மரத்தில், பூனை ஒன்று கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஏறியது. ஆனால், மரம் உயரமாக இருப்பதால், பூனையால் கீழே இறங்க முடியவில்லை. தபால் ஊழியர்கள் சிலரும் பூனையை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் பூனையை மீட்க முடியவில்லை.
இதையடுத்து, முன்னாள் தபால் ஊழியர் ஹரிஹரன் என்பவர் நமக்கு கொடுத்த தகவலின் பேரில் நாம் தலைமை தபால் அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு மரத்தில் இருந்து இறங்க முடியாமல் பூனை தவித்து வந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தோம். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட தலைமை தீயணைப்பு துறை அலுவலர் பிரதீப் குமாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், ஸ்டேஷன் ஆஃபிஸர் அண்ணாதுரை தலைமையில் சிவகுமார், தேவராஜ், ஜெயச்சந்திரன், சிவகுமார், தங்கபாண்டி, ஶ்ரீதரன், விபின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஏணி, குச்சி உள்ளிட்ட உபகரணங்களுடன் அவர்கள் பூனையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், பூனை சிக்கவில்லை. மரக்கிளையில் அங்கும், இங்கும் பூனை தாவியது. அரை மணி நேர முயற்சிக்குப் பிறகு பூனை மீட்கப்பட்டது. பூனையை பிடிப்பதற்காக, கீழே பெட்சிட்டை விரித்து தீயணைப்பு துறையினர் தயாராக இருந்தனர். ஆனால், பூனை பெட்சிட்டில்வ விழுகாமல், கீழே விழுந்து நொடிப்பொழுதில் அந்த இடத்தை விட்டு ஓடியது. பூனையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.