கிரிக்கெட் போட்டிகளில் தொழில்நுட்பம் ரீதியாக புதிது புதிதான விதிமுறைகளை ஐசிசி அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மைதானத்தில் வீரர்களின் செயல்பாடுகளுக்கு கடிவாளம் போடும் வகையில் புதிய விதிமுறைகளை வரும் 28ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசியின் புதிய விதிப்படி வீரர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டால் நடுவர்களால் வெளியேற்றப்படுவார்கள். கால்பந்து போட்டியில் வீரர்கள் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே விதிமுறைதான், ஆனால், ரெட் கார்டுக்கு பதில் 2 சிக்னல்கள் நடுவர்களிடம் இருந்து வரும்.
அதேபோன்று இனி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் முதல் 80 ஓவரில் 1 முறை மட்டுமே டிஆர்எஸ் முறை பயன்படுத்த முடியும். இதற்கு முன் இரண்டு முறை பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தது. வீரர்களின் பேட்டின் விளிம்புகள் 40 மில்லி மீட்டர் அளவிற்கு மேல் இருக்கக்கூடாது. 20 ஓவர் போட்டிகளில் நடுவரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, ரன் அவுட், கேட்ச் ஆகியவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் இந்த விதிமுறை வரும் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தாலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான தொடரில் இந்த விதிமுறைகள் இருக்காது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் போட்டிகளே பழைய விதிமுறைகளுடன் நடைபெறும் கடைசி போட்டிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.