அனைத்து சிறப்பு காவல்படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 19 சிறப்பு காவல்படைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய சம்பவம் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதேபோல் மாநகர காவல் ஆணையர்கள்
மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், விடுமுறையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து சிறப்பு காவல்படை கம்பெனிகளும் தங்களது முகாம்களுக்கு திரும்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அசாதாரண சூழ்நிலைகளில் பிறப்பிக்கப்படும் இதுபோன்ற உத்தரவு தற்போது திடீரென வெளியாகியுள்ளதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடவடிக்கையே என்றும், நீட் உள்ளிட்ட போராட்டங்களுக்காக பாதுகாப்பு பணிக்காக சிறப்புக் காவல்படையினர் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகம் அமைதி நிலைக்கு திரும்பி உள்ளதால் முகாம்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்,கடலூர், வேலூர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றும் (செப்.,26), மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 27ஆம் தேதி திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.