கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் 7 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சியில் பேசுகையில், அம்மா வழியில் செயல்பட்டு வரும் தமிழகஅரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றது. ஒவ்வொறு மாவட்டத்தின் கடைகோடி ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் நகரப்பகுதிகளில் உள்ளவர்களைப்போல் சுகாதாரம், பள்ளிகள், உயர்மட்ட பாலங்கள், சாலைகள், அங்கன்வாடி மையங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் மேம்பட்ட உட்கட்டமைப்பு பெற வேண்டும், என்ற நோக்கில் உள்ளாட்சித்துறை சீரிய முயற்சி எடுத்து வருகின்றது.
அதன்படியே இன்று தேவராயபுரம், வெள்ளிமலைப்பட்டினம், மத்வராயபுரம் ஊராட்சிகளில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா பார்க் மற்றும் அம்மா ஜிம், தீத்திபாளையம் கிராமத்தில், காளம்பாளையம் முதல் வேடப்பட்டி வரை செல்லும் சாலையில் மக்களின் பயணத்தை எளிமையாக்க நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.2.90 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலம், தாளியூர் பேரூராட்சி பூச்சியூரில் ரூ.60 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொண்டாமுத்தூர் பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் வலையபாளையத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவராயபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் அமைத்தல், வெள்ளிமலைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக இரண்டு வகுப்பறைக் கட்டிடம், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி முள்ளாங்காடு சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி, மத்வராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.15லட்சம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடம் என 11 வளர்ச்சி மேம்பாட்டு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் விரைந்து முடித்திட அலுவலர்களுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே முடிவுற்ற பணிகளான வெள்ளிமலைப்பட்டினம் ஊராட்சி விராலியூர் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அங்கான்வாடி மையக்கட்டிடம், தென்னமநல்லூர் ஊராட்சி கள்ளிமேட்டில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடம், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி பட்டியா கோவில் பதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், இக்கரைபேளுவாம்பட்டி ஊராட்சி முள்ளங்காட்டில் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்காடிமைய கட்டிடம், ஏழுவாய்க்கால், செம்மேடு காந்தி காலனி மற்றும் மத்வராயபுரம் ஊராட்சி நொய்யல் நகரில் தலா ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயனிகள் நிழற்குடை என மொத்தம் ரூ.49 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 7 பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று அற்பணிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வளர்ச்சி மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் கிராமங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், நகரப்பகுதிகளுக்கு இணையாக கிராமப்பகுதிகளும் மேம்பாடு அடைகிறது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு வசந்தாதேவி, கோட்டாட்சியர்ம துராந்தகி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.