கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி. சந்திரகாந்தி நகர் பகுதியில் பயனற்ற நிலையில் இருந்த பூங்கா, சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் முயற்சியால் புனரமைக்கப்பட்டடது. அனைத்து சீரமைப்புப் பணிகளும் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும குழந்தைகளின் பயன்பாட்டிற்காக பூங்கா இன்று (25.09.2017) திறக்கப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சியின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு மட்டும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3,212 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து பணிகளையும் மாநகராட்சியே செய்வது சிரமம். பொதுமக்கள் பங்களிப்பின்றி நல்ல செயல்கள் நடைபெறாது.

தற்போது திறக்கப்பட்டுள்ள பூங்கா கோவை மாநகராட்சியின் கண்காணிப்பில் இருக்கும். இருந்தபோதும் இந்த பூங்காவை அழகாக வைத்திருப்பது பொதுமக்கள் கையில்தான் உள்ளது. இது போன்ற பூங்காக்கள் பொதுமக்கள் நடை பயணம் மேற்கொள்ளவும், பொழுதுபோக்கிற்காகவும் பயன்படும் இடமாக இருப்பதோடு, உள்ளத்தையும், உடலையும் சீர்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் இணை இயக்குனர் செல்வராஜ் மற்றும் ஜி.ஆர்.ஜி. சந்திரகாந்தி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.