அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதுமுள்ள மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் நியாயமான இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவம் அவர்கள் வலியுறுத்தினர்.
