ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களே ஆளுநரை குறை சொல்வார்கள் எனவும் தமிழகத்தில் தற்போதைக்கு தேர்தல் வர வாய்ப்பில்லை எனவும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட முடியாது என ஆளுநர் கூறி உள்ளது சரி எனவும், தமிழக அரசியல் நிலவரத்திற்கு ஏற்ப ஆளுநர் முடிவு செய்வார். எதிர்கட்சியினர் விருப்படி ஆளுநர் நடந்து கொள்ள முடியாது எனவும் சட்ட விதிகளின் படியே ஆளுநர் நடந்து கொள்வதாக தெரிவித்தார்.
திமுகவை சேர்ந்தவர்கள் ஆளுநரை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியவர், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களே ஆளுநரை குறை சொல்வார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்திப்பது என்பது அரசு சார்பாகவும் நிதி உதவி கேட்டுபதும், தவிர கட்சி பிரச்சினைகள் தொடர்பாக கிடையாது எனவும் இரட்டை சின்னத்தை மீட்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு நிகழவில்லை எனவும் தெரிவித்தார்
கட்சி பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தமிழக அரசு நிர்வாகத்தை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும் என்றவர், இதை தனது கோரிக்கையாக முதல்வருக்கு வைப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கட்சியின் உட்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்ள தனியாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும் எனவும் அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தற்போதைய ஆளும் கட்சிக்கு மாற்றாக திமுக இருக்க முடியாது என்று கூறினார்.
தமிழகத்தில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகவும் ஒரு காரணம் என கூறினார். ஒரு வேளை தேர்தல் வரும் பட்சத்தில் திமுக வெற்றிப்பெறும் என கருத்து கணிப்புகள் சொல்லுவது தொடர்பான கேள்விக்கு தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தற்போதைய சூழலில் தேர்தல் வர வாய்ப்பில்லை எனவும் தமிழிசை தெரிவித்தார்.