வங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2-வது சனி, 4-வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது.
அதாவது, வருகிற 12ம் தேதி (நாளை) இரண்டாவது சனிக்கிழமை, 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14-ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15-ம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. மீண்டும் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26-ம் தேதி 4-வது சனிக்கிழமை, 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருகிறது.
இவ்வாறான நான்கு நாள் தொடர் விடுமுறையால் வர்த்தக பணபரிமாற்றம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் இன்றே ஏடிஎம் வாசலில் குவிந்து வருகின்றனர்.
ஏறக்குறைய அனைத்து வங்கிகளும், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் ஏஜென்சிகள் மூலமாக செய்து வந்தாலும், தொடர் விடுமுறையால், பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஏடிஎம் சேவை முடங்கும் என கருதப்படுகிறது.