திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களை கோவையில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் சேர்க்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கோதபாளையத்தில் திருப்பூர் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளர் முருகசாமி என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பள்ளியில் பயிலும் சுமார் 110-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியானது. இந்நிலையில் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அப்பள்ளியில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மற்றும் இன்பண்ட் ஜீசஸ் பள்ளியில் சேர்க்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் பெற்றோர்கள் மாற்று சான்றிதழ்களை பெற்று உடனடியாக புதிய பள்ளிகளில் மாணவர்களை சேர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.