இளம் பத்திரிகையாளர்கள் மற்றும் வருங்கால பத்திரிகையாளர்கள் களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து துறை வல்லுனர்களைக் கொண்டு கோவை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது. அதன்படி, 8-வது பயிற்சிப்பட்டறை இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். இன்றைய பயிற்சிப்பட்டறையில் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழின் செய்தியாளர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'காவல் துறை தொடர்பான செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

குற்ற விசாரணை முறைச்சட்டம் (CRPC) காவல்துறையின் அதிகாரங்களையும், செயல்படும் முறைகள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டுள்ளது. காவல்துறை தொடர்பான செய்தி சேகரிப்பின் போது, ஒவ்வொரு செய்தியாளரும் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு செய்தியினையும் மிக நேர்த்தியாக கையாள வேண்டும். எந்த ஒரு ஆதாரமுமின்றி யூகத்தின் அடிப்படையில் செய்திகளை கொடுக்கக் கூடாது. அவ்வாறு யூகத்தின் அடிப்படையில் செய்திகளை பதிவு செய்யும் போது சம்மந்தப்பட்டவர் மீது வழக்குகள் பாய்வதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
காவல்துறையில் அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரையில் அனைத்து அதிகாரிகளிடமும் நல்ல உறவு முறையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு செய்தியை முன்கூட்டியே நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
க்ரைம் செய்தி சேகரிப்பின் போது, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முழுமையாக விசாரித்து செய்தியை பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் இருந்து நாம் தனித்து நிற்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சிப்பட்டறையின் முடிவில் பத்திரிகையாளர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தார்.
