தோல் தானத்தால் மறுவாழ்வு பெற்ற 62 பேர்கள் தோல் தானமாளித்த குடும்பங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கோவை கங்கா மருத்துவமனையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் அறுவை சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் தோல் தானமாளித்த உறவினர்களுக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் ரமணி மற்றும் கவுரவ விருந்தினராக ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் சங்கத்தின் தலைவர் தருண் ஆர்.ஷா ஆகியோர் கலந்து கொண்டார்.

தோல் தானத்தின் அவசியம் பற்றிய கங்கா மருத்துவமனை தோல் வங்கி கை மற்றும் அறுவை சிகிச்சையின் தலைவர் டாக்டர் எஸ். ராஜ சபாபதி கூறுகையில், கண் பார்வையற்றோருக்கு கண்தானம் மூலம் மறு வாழ்வு கிடைப்பது போல தீக்காயம், விபத்து போன்றவற்றில் சிக்கி தோல் சேதமடைந்து ஆபத்தான நிலையில் வருபவர்களுக்கு தோல் தானம் மறுவாழ்வு அளித்து வருகிறது. இதற்கு கோவை கங்கா மருத்துவமனையில் கை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் இரு ஆண்டுகளாக பிரத்யேக தோல் வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் இதுவரை இறப்பிற்குப் பின் 103 போர்கள் தோல் தானம் செய்துள்ளனர். அதன் மூலம் 62 பேர் மறு வாழ்வு அடைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கி தோல் சேதமடைந்தவர்களுக்கும், தீ விபத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது தான் தோல் தானம். இதற்கு இறந்தவரின் உடல் 6 மணிநேரத்திற்குள் கோவை கங்கா மருத்துவமனைக்கு தோல் தானம் அளிக்க தகவல் தெரிவித்தால், கங்கா மருத்துவமனை தோல் வங்கியின் மருத்துவ குழுவினர் அவர்கள் இடத்திற்கு உடனடியாக சென்று இறந்தவர்களின் முதுகு கால் மற்றும் தொடை பகுதிகளிலிருந்து 0.3 மில்லி மீட்டர் அளவிற்கு மட்டுமே தோல் எடுக்கப்படுவதால் இறந்தவர்களின் உடலில் இருந்து இரத்த கசிவு இருக்காது மற்றும் பார்ப்பவர்க்குக்கு உடலில் எவ்விதமான மாறுதலும் இருக்காது. இதன் மூலம் தனமாக பெற்ற தோலை பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பொருத்துவதன் மூலம் கிருமிகள் மேலும் உடம்பில் பரவாமல் நோயாளிகளை காப்பாற்ற முடிகிறது.

கங்கா மருத்துவமனையின் தோல் வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தோல் தானம் அளித்ததால் கோவையில் மட்டுமல்லாமல், டெல்லி, ஜாம்ஜெட்பூர், மணிப்பால் போன்ற நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கும் தோல் அனுப்பப்பட்டுள்ளது. தானம் பெற்ற தோலை 5 வருடங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் வீணாக வாய்ப்பு இல்லை. கண்தானம் மூலம் மறு வாழ்வு கிடைப்பது போல் தோல் தானம் கிடைக்கவும் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இறந்தவரின் உடலில் இருந்து தோல் தானம் பெற உதவிய குடும்பத்தார்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி கூறினார்.