வன விலங்குகளின் ரோமங்களில் இருந்தோ அல்லது அவற்றின் உறுப்புகளை கொண்டோ எந்த பொருட்களையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கீரி மற்றும் நரி போன்ற வன விலங்குகளின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து, இன்று வன உயிரின குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.

வன உயிரின குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மதிவாணன் தலைமையில் 12 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து கோவையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது காந்திபுரம், டவுன்ஹால், சவுரிபாளையம் போன்ற பல்வேறு இடங்களில் வன உயிரினங்களின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து, சோதனை நடைபெறும் என்றும் இது தொடர்பாக நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.