கோவை மதுக்கரையொட்டிய பகுதியில் தொடர்ச்சியாக யானையின் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மதுக்கரை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் தள்ளாடிய நிலையில் சுற்றிய சிறுத்தையை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்கானித்த கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே சிறுத்தை மயங்கி விழுந்தது.

இதனை அடுத்து, வனத்துறையினர் தண்ணீரில் நனைத்த துணியை கொண்டு சிறுத்தையை சுற்றி வனத்துறையினரின் வாகனம் மூலம் மதுக்கரை அடுத்துள்ள இந்திய கடற்படை வீரார்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.வனத்துறை மருத்துவர்களின் சிகிச்சைக்காக காத்திருந்த நிலையிலேயே சிறுத்தை உயிர் இழந்தது.
நகரத்தையொட்டிய பகுதியான மதுக்கரையில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்துள்ளதும் அது மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அங்கு சென்று வனப்பாதுகாவலர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர் மனோகரன் சிறுத்தை இறந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டு அங்கேயே புதைக்கப்பட்டது.