தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டியளித்தார்.
கோவை மற்றும் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரும் என முதல்வர் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கணினி வழி ஜிஎஸ்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள், சந்தேகங்கள் குறித்து கோவை, திருப்பூர் சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் நேரடியாக விளக்கப்படவுள்ளது. அறிவித்தப்படி ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டாலும் அடுத்த 3 மாதங்களுக்கு வரி விதிப்பில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படும்.
குடியரசுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அவரை வேண்டாம் என்று கூறுவதற்கு எந்த காரணங்களும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை. ராம்நாத் கோவிந்த் செய்தி தொடர்பாளராக இருந்தபோது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை "ஏலியன்ஸ்" என்று கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுவது முற்றிலும் பொய்" இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.