பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் குறித்து நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள், தற்போது அபுதாபியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் இருந்தபோது, கடந்த 2025 செப்டம்பர் 28-ஆம் தேதி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் தொடர்புகொண்ட மர்மநபர்கள், பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பவைத்து, பல்வேறு தவணைகளில் ரூ.27,45,800-ஐ பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பச் செய்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏற்கனவே கோவை அறிவொளி நகரைச் சேர்ந்த வசந்த் (20), கோவைபுதூரைச் சேர்ந்த அஜல் (22), திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரியைச் சேர்ந்த ஜனகன் (23), பல்லடத்தைச் சேர்ந்த சிம்கார்டு விற்பனையாளர் பரத் (26) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த உதயகுமார் (38) ஆகிய ஐந்து பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.



விசாரணையில், இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து பணம் பறித்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வசந்த் தனது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதும், அஜல் கமிஷன் ஏஜென்டாக செயல்பட்டதும், ஜனகன் வங்கிக் கணக்குகள் மற்றும் சிம்கார்டுகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் புரோக்கராக இருந்ததும், பரத் பொதுமக்களின் ஆதார் விவரங்களை தவறாக பயன்படுத்தி 250-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை குற்றச் செயல்களுக்காக வழங்கியதும், உதயகுமார் வெளிநாட்டு மோசடி கும்பல்களுக்கு இந்திய வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் முகவராக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதயகுமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகளை கைது செய்யவும், மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறியவும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...