தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு வெயிளின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. இதனை தனிக்கும் வகையில் அவ்வப்போது சிறிது மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது.
அதுமட்டுமின்றி, தற்போது கோடை காலத்தினை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களும் துவங்கியுள்ளன. ஆண்டுதோறும் கோடை காலத்தினை முன்னிட்டு நடத்தப்படும் இத்திருவிழாக்கள் மூலம் கடவுளை குளிர்வித்து இயற்கையை பேணிக்காப்பதாக ஒரு ஐதீகம்.
அதன்படி தற்போது கோவை மாவட்டங்களில் மக்கள் குடியிருப்புகளின் அருகே உள்ள பல கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி வருகிறது. இந்த திருவிழாக்கள் பெரிதும் நடத்தப்படும் கோவில்கள் மாரியம்மன் கோவில்களே ஆகும். ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நடத்தப்படும் மாரியம்மன் கோவில் திருவிழாக்களின் போது அம்மனுக்கு தினமும் நீராட்டுதல், முளைப்பயிறு, மாவிளக்கு வைத்தல், மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட குளிர்ச்சியான பல நிகழ்வுகள் நடைபெறும்.

கோவை மாவட்டம், பீளமேடு அருகே அமைந்துள்ள சவுரிபாளையம் ப்ளாக் மாரியாம்மன் கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசிதிபெற்ற கோவில் ஆகும். தற்போது இக்கோவிலில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட இக்கோவில் திருவிழாவில் இன்று பக்தர்கள் அலகு குத்தியும், அங்க பிரதட்ஷனம் செய்தும், கரகம் தூக்கியும் தங்களது வேண்டுதல்களை முன்வைத்தனர்.
முன்னதாக, மாரியம்மன் சிலை வீதி உலா நடைபெற்றது. இதில், சவுரிபாளையத்திற்கு உட்பட்ட வீதிகளின் வழியாக மாரியம்மன் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் வழிபட்டனர்.

அப்போது, பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மொட்டையடித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும், இந்த ஊர்வலத்தின் போது மக்கள் தங்களது மீது தண்ணீர் ஊற்றி மகிழ்ந்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கென நீர்மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டு மோர் விநியோகமும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்வுடன் பிளாக் மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.
