பெரும்பாலான தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனங்கள் தங்களது குடியிருப்பு விற்பனையின் போது "பாதுகாக்கப்பட்ட சூழல்" (கேட்டுடு கம்யூனிட்டி) என்ற அறிவிப்பின் மூலம் விற்பனை செய்வர். அவ்வாறாக அறிவிக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதி உள்ள சாலையில் அங்கே வீடில்லாத மற்ற நபர்கள் நுழைய முடியாது. இதுவே, பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு பகுதி ஆகும்.
அக்குடியிருப்பு பகுதியின் உள்ளே உள்ள சாலையும் அக்குடியிருப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது என்றே அதன் உரிமையாளர்கள் நுகர்வோர்களிடம் விநியோகிக்கின்றனர். ஆனால், அவ்வாறாக அறிவிக்கப்படும் சாலைகள் பெரும்பாலும் அரசு நிர்வாகத்தால் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டதே ஆகும்.
இவ்வாறான தனியார் குடியிருப்பு உரிமையாளர்கள், குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் மறைத்து அல்லது ஆக்கிரமித்து ஒரு பெரியளவிலான வளாகத்தினை ஏற்படுத்திவிடுகின்றனர்.
ஆனால், உண்மையில் இத்திட்டமானது தடைசெய்யப்பட வேண்டியது. பொதுமக்களால் பயன்படுத்த வேண்டிய சாலையை ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பது குற்றமாகும். சட்டப் படி, பிரத்தியேகமாக தங்களுக்கு மட்டுமே இந்த சாலை என குடியிருப்பு வாசிகள் உரிமைகொண்டாட எவ்வித சட்டங்களும் இல்லை. இவ்வாறான குடியிருப்பு சாலையில் நுழையும் போது பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொள்வது யார் அளித்த உரிமை. இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட பல சாலைகள் மாநகராட்சியால் பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆகும். அதனை பராமரிக்கும் பணியையும் மாநகராசி நிர்வாகமே ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் பயன்பாடு மட்டும் தனிநபர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு.
இவ்வாறாக, பொதுமக்கள் பயன்பாட்டு இடத்தை ஆக்கிரமித்து கட்டமைக்கப்பட்டுள்ளதே கோவை நஞ்சுன்டாபுரம் சாலையில் அமைந்துள்ள பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே குடியிருப்பு. அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு இது சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்பது தெரியாது. இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியென்றால் அச்சாலை உக்கடம் மற்றும் சுந்தராபுரம் செல்வதற்கு நேரம் குறைவான எழிய வழி ஆகும்.

கோவை மாநகராட்சி வார்டு எண் 75, பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே குடியிருப்பு பகுதியில் வீட்டுமனைகள் உட்பட 615 அடுக்குமாடி குடியிருப்புகளும் நஞ்சுன்டாபுரம் மற்றும் உக்கடம் பகுதியை இணைக்கும் பொதுபயன்பாட்டு சாலையை ஆக்கிரமித்தே கட்டியுள்ளனர்.
அப்பகுதயில் வசிக்கும் சிலருக்கு இதுகுறித்த தகவல் தெரிந்திருந்தும் அவர்கள் இதுகுறித்து வாய்திறக்க மறுத்து வருகின்றனர். ஆனால், பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் கனகசுந்திரம் என்னும் நபரே ஆக்கிரமிப்பு குறித்தான வழக்கை தொடர்ந்துள்ளார்.
தொடர்ந்து, இதுகுறித்தான தகவலை அங்குள்ள மக்களிடம் தெரிவித்தும், குடியிருப்பு நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 3ம் தேதியன்று தமிழக முதலமைச்சரின் சிறப்பு செல்-க்கு மனு அளித்துள்ளார்.
கனகசுந்திரத்தின் இத்தகைய செயல்களைத் தொடர்ந்து பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே குடியிருப்பு நிர்வாகம் அவருக்கு சில இடையூறுகளையும், சிரமங்களையும் தர ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து கனகசுந்திரம் கூறுகையில், குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான தனி குடியிருப்பு பகுதி, சுற்றுச்சூழல், சுற்றுச்சுவர் அடங்கிய வீடு, தனி சாலை உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கின்றனர். ஆனால், அவ்வாறான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பின் அவை அந்த குடியிருப்பு நிறுவனத்திற்கு சொந்தமானதா என யாரும் ஆராய்வது இல்லை. இங்கே உள்ளவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட சாலையையே ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறாக சாலையை ஆக்கிரமித்த பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே நிர்வாகம் குறித்து தமிழக முதலமைச்சர் சிறப்பு செல்-க்கு மனு அளித்ததைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. மாநகர காவல்துறை ஆணையர் இதுகுறித்தான விசாரணையை போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் எஸ்.சரவணனை விசாரிக்க அனுமதித்துள்ளார்.
நஞ்சுண்டாபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான 60 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதற்கான அனைத்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளேன். டிபிஏ அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி மற்றும் ஊரக திட்டமிடல் அதிகாரிகள் இதுகுறித்த உரிய விசாரணை மேற்கொண்டு பொதுமக்களுக்கான பாதையை மீட்டெடுக்க வேண்டும்" என அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இது ஒரு தனிப்பட்ட ஒரு குடியிருப்பு பிரச்சனை இல்லை. நகரத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள் இவ்வாறாகவே பொதுபயன்பாட்டு நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மக்கள் ஒரு குடியிருப்பினை வாங்கும் பொழுது இது உண்மைத்தன்மை உடையதா, அனைத்து விதமான ஆவணங்களும் சரியான முறையில் உள்ளதா என்பன உள்ளிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என்றார் கனகசுந்திரம்.
போக்குவரத்து சிக்கலில் தவிக்கும் கோவை மாநகரத்தில் பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற குடியிருப்பு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சாலைகளை மீட்டெடுப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதே அனைவரது கருத்தாகும்.