கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில், உதகை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணி, 11.30 மணி மாலை 3 மணி என வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கேத்தி வரை இயக்கப்படுகிறது.
நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்துபெற்ற பாரம்பரிய நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், தினந்தோறும் மேட்டுபாளையம் - குன்னூர் - உதகை இடையே மலை ரயில் இயக்கபட்டு வருகிறது. அதேபோல உதகை - குன்னூர் இடையிலும் மலை ரயில் சேவை செயல்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவதால், வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து, கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உதகை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணி, 11.30 மணி மாலை 3 மணி என வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த மலை ரயில் கேத்தி வரை இயக்கப்படுகிறது.
உதகையிலிருந்து கேத்தி சென்று மீண்டும் உதகைக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுவார்கள். முதல் வகுப்பில் பயணம் செய்ய தலா 630 ரூபாயும், 2-ஆம் வகுப்பில் பயணம் செய்ய தலா 465 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன் சிறப்பு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.