கோவையில் இருந்து கேரளாவுக்கு 1.5 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பாபுவை (47) போலீசார் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கைது செய்த நிலையில், மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை: கோவையிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அருண் உத்தரவின்பேரில், கோவையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சேரன்நகர் பகுதியில் கடந்த மாதம் 27 ம் தேதி, 1.5 டன் ரேஷன் அரிசியை கோவை வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பாபு (47) கேரளாவிற்கு கடத்த முயன்றார்.
அப்போது, அவரை கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது கோவை, பொள்ளாச்சியில் உள்ள காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், பாபுவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து, சிறையில் உள்ள பாபுவிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.