சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் இட பிரச்னை தொடர்பாக வழக்குபதியாமல் இருக்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூலூர் அடுத்த சந்தமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்பவரின் மகன் பஞ்சலிங்கம். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது அம்மா தனலட்சுமி எனபவருக்கும் கடந்த 22ஆம் தேதி மாலை டிப்பர் லாரி நிறுத்துவது சம்மந்தமாக வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் பஞ்சலிங்கத்தின் தந்தை சுப்பிரமணியம் தனலட்சுமி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது பஞ்சலிங்கம் தந்தையை சமாதானபடுத்தி அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் மறுநாள் சுல்தான்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்தை செல்போனில் அழைத்து ஜெயபிரகாஷ் என்பவர் புகார் கொடுத்திருப்பதாகவும், விசாரிக்க வேண்டும் என கூறி காவல் நிலையம் வரச்சொல்லியுள்ளார்.
அப்போது அங்கு சென்ற அவரை உள்ளே உட்கார வைத்து விட்டு தன்மேல் முதல் தகவல் அறிக்கை போடாமல் அவர்களிடம் சமாதானமாக பேசி வெறும் CSR மட்டும் போட்டு தன்னை விடுவிப்பதாகவும் அதற்கு தன்னை கவனிக்குமாறு சிறப்பு உதவி ஆய்வாளர் கூறியுள்ளார்.
பின்னர் பஞ்சலிங்கம் ஊர்காரர்கள் மூலம் பேசி சமாதானமாக போவதாக எழுதி கொடுத்து விட்டு காவல் நிலையத்திற்கு வெளியே வரும்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவரை அழைத்து FIR போடாமல் CSR மட்டும் போட்டு தன்னை காப்பாத்தி உள்ளதாக கூறி, அதற்கு ரூ.5000 பணம் கொடுக்க சொல்லி கேட்டுள்ளார். அதற்கு தனக்கு மனசு சரியில்லை என்றும் மாலை வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், அடுத்தடுத்து பணம் கேட்டு தொல்லை செய்ததால், கோவை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் படி, பஞ்சலிங்கம் சிறப்பு உதவிஆய்வாளர் ரவிச்சந்திரனை சந்திக்க சென்றுள்ளார்.
காவல் நிலையத்தின் அருகேயுள்ள கருப்பராயன் கோவில் முன்பு வரச்சொல்லி லஞ்சமாக ரூ.4,000 வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், SSI ரவிச்சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.