உடுமலை நகராட்சி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கடைகளின் உரிமையாளர்கள் சிலர் பாதைகளை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபடுவதால், பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் பாதைகளை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபடுவதால் பயணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
உடுமலை நகராட்சியின் சார்பில் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் மத்திய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளும் அடங்கும்.
பேருந்து நிலையம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும். இதை சாதகமாகக் கொண்டு கடைகளை ஏலம் எடுத்த உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் மூணாறுக்கு செல்லும் பேருந்து நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது,
பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் பொதுமக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. குறிப்பாக பேருந்துக்காக காத்திருக்கும் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்றனர்.
பொதுமக்களை கவர்ந்து விற்பனையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில் ஒரு சில கடை உரிமையாளர்கள் கடைக்கு முன்புற பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மூணாறு பேருந்து நிற்கும் பகுதியில் உள்ள பாதையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
அங்கு பொருட்களை வாங்கும் ஒரு சிலர் பாதையை அடைத்து நின்று கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளிப்புற பகுதிக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தை சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை. எனவே உடுமலை பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கடைகளில் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கு முன் வர வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.