சென்னை மாநகரில் உள்ள அரசு பேருந்து வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்குவதில் உள்ள சாதக பாகதங்களை ஆய்வு செய்வதற்கான நிறுவனம் அமைப்பதற்கான டெண்டர் மட்டுமே கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வளர்ந்து வரும் சென்னை நகரின் தேவையை ஈடு செய்யும் வகையில், தனியார் பேருந்துகளை இயக்கப்போவதாக பதற்றம் பரவி வருவதாகவும், இது தவறான தகவல் எனவும் தெரிவித்தார்.
மேலும், அவ்வாறு தனியார் பேருந்துகளை இயக்கப்படக்கூடிய பட்சத்தில் அதற்கான ஆலோசனை நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக மட்டுமே உலக வங்கி பரிந்துரையின் பேரில் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தனியார் பேருந்துகளுக்கான அரசாணை அதிமுக ஆட்சியில் போடப்பட்டதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், உலக வங்கியின் கருத்து அடிப்படையிலேயே டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அதேபோல், பேருந்து தனியார் மயமாகிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்ட அவர், ஏற்கனவே ஓடும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாது என்றும், பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பது தேவையற்ற வதந்தி என்றும் அப்போது அவர் விளக்கம் அளித்தார்.
உலக வங்கியின் கருத்துகள் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என கூறிய அமைச்சர், மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பாதிக்கப்படாது, நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும்,
அரசு பேருந்துகள் அரசு பேருந்துகளாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டும் புதிய பேருந்துகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக கூறிய அமைச்சர், போக்குவரத்து தொழிற்சங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.