கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து கெட்டுப்போன சிக்கன் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
கோவை: கோவையில் பல இடங்களில் செயல்பட்டு வரும் ஹெச்2பி பிரியாணி ஹோட்டலின், கிளை ஒன்று ஜி.என்.மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு வாடிக்கையாளர் ஒருவர் அந்த ஹோட்டலுக்கு சென்று கிரில் சிக்கன் ஆர்டர் செய்து வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டில் அதனை பிரிக்கும் போது அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. மேலும் சிக்கன் கடினமாகவும் இருந்துள்ளது. இதை அடுத்து மீண்டும் அந்த ஹோட்டலுக்கு சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது ஹோட்டல் மேலாளர் சிறு தவறு நடந்து விட்டதாகவும் அதை பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
ஹோட்டலுக்குள் சென்று குளிர்சாதன பெட்டியை திறந்து காட்டுமாறு வாடிக்கையாளர் கூறியுள்ளார். அப்போது, ஏராளமான குளிர்சாதன பெட்டிகளில் சிக்கன்களை அடுக்கி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், அது குறித்து மேலாளரிடம் கேட்டபோது இங்கிருந்து பத்துக்கு மேற்பட்ட கடைகளுக்கு அனுப்புவதற்காக வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த வாடிக்கையாளர் அந்த சிக்கனை அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், கெட்டுப்போன சிக்கனை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்த அந்த ஹோட்டலுக்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் ஹோட்டல்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.